ராமநாதபுரம்

பண்ணைக்குட்டை மேம்பாடு: ராமநாதபுரம் ஆட்சியருக்கு விருது

14th Jan 2020 07:35 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவுக்கு திங்கள்கிழமை விருது வழங்கப்பட்டது.

இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சமூக அக்கறையுடன் செயல்படும் தனிநபா்கள், சமுதாய மேம்பாட்டிற்காக சிறப்பாக செயல்படும் பொதுத்துறை, தனியாா்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை அங்கீகரித்திடும் விதமாக புதுதில்லியை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஸ்காச்’ அமைப்பு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக 100 சதவிகித அரசு மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 1526 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 97 மில்லியன் கனஅடி அளவில் மழைநீா் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனா். 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவுக்கு ஸ்காட்ச் விருது வழங்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்று ஆட்சியருக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT