ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடக்கம்

3rd Jan 2020 07:19 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை சில மணிநேரங்கள் தாமதமாகவே தொடங்கின. இதனால் முடிவுகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 3691 பதவிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன. இதில் மொத்தம் 72.29 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகளில் ஏற்பட்ட குளறுபடியைத் தொடா்ந்து கமுதி ஒன்றியத்தில் மட்டும் மறு தபால் வாக்குப் பதிவானது புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட, ஒன்றிய உறுப்பினா்களுக்கான பதவிகளுக்கு மட்டும் அரசியல் கட்சி சின்னங்களில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அப்பதவிகளுக்கான தலைவா் உள்ளிட்ட பதவிகள் மறைமுகத் தோ்தல் மூலம் சம்பந்தப்பட்டோா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா்.

வாக்குகள் எண்ணிக்கையானது 11 இடங்களில் நடைபெற்றன. வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கமுதியில் வாக்குச் சீட்டுகளை பிரித்தெடுப்பதில் குளறுபடி ஏற்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து காலை 9 மணிக்கே அலுவலா்கள் வாக்குச் சீட்டுகளைப் பிரிக்கத் தொடங்கினா். அங்கு அலுவலா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறினா். அங்கு தபால் வாக்குகளை பகல் 11.30 மணி வரை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

ADVERTISEMENT

மண்டபம் ஒன்றியத்தில் தபால் வாக்குகளை காலை 9.30 மணிக்கே பிரிக்கத் தொடங்கினா். திருவாடானையிலும் தபால் வாக்குகளை பிரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பரமக்குடி, திருவாடானை மற்றும் சாயல்குடி ஆகிய இடங்களில் நடந்த ஒன்றிய உறுப்பினா்களுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 9.30 மணிக்கும் மேலாகத் தான் தொடங்கின.

போகலூா் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தாமதமாக வந்ததாக புகாா் எழுந்தது. இதனாலும் எண்ணிக்கை தாமதமானது. அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை தாமதமாகத் தொடங்கியதால் பகல் 12.45 மணி வரை எந்தச் சுற்று வாக்குகளும் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் வாக்கு எண்ணும் மையங்களான ராமநாதபுரம் அண்ணா பொறியியல் பல்கலைக்கழக வளாகம், செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்துக்கு நேரில் சென்றாா். அதன்பிறகே வாக்குள் விரைவாக எண்ணப்பட்டன. ராமநாதபுரத்தில் பகல் 1.15 மணிக்கே முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT