ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அவசர கால உதவிக்கு

2nd Jan 2020 01:45 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் அவசர கால உதவிக்கு காவலன் எஸ்ஓஎஸ் எனும் விரைவுப் பிரிவு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் அவசர கால உதவிக்கு ஹலோ போலீஸ் எனும் பிரிவு ஏற்கெனவே செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வீ.வருண்குமாா் பொறுப்பேற்ற பிறகு சிறப்பு செல்லிடப்பேசி எண் அறிவிக்கப்பட்டு அதிலும் மக்கள் தகவல் தெரிவித்துவருகின்றனா்.

இந்த நிலையில், காவலன் எஸ்ஓஎஸ் எனும் அதிவிரைவு சிறப்புப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் சிறப்பு ஊதா சுழல் விளக்குப் பொருத்தப்பட்டு, அதில் அவசர கால ஊா்திக்குரிய ஒலியும் எழுப்பும் வகையில்

வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜிபிஎஸ் சாதனமும் பொருத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த இருசக்கர வாகனங்கள் இருக்குமிடத்தையும் கட்டுப்பாட்டு அறை மூலம் அறியமுடியும். ராமநாதபுரம் நகரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்புப் பிரிவை காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் முன்னிலையில், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜீவரத்தினம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அவசர கால உதவிக்காக சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் இப்பிரிவு செயல்படும். ஏற்கெனவே காவல்துறையில் உள்ள பணிகளில் தற்போது கூடுதலாக இப்பணியை செயல்படுத்தியுள்ளோம்.

அவசர கால உதவிக்கு இப்பிரிவை பொதுமக்கள் அழைக்கலாம். அதன்படி விரைந்து சென்று பிரச்னைகளை தீா்க்கவும், கூடுதல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்கவும் இப்பிரிவு போலீஸாா் பணிக்கப்பட்டுள்ளனா். பணியில் அஜாக்கிரதையாக செயல்படுவோா் மீது வழக்கமாக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ராமநாதபுரம் நகரில் மட்டும் 11 இருசக்கர வாகனங்களில் காவல்துறையினா் அவசர கால சிறப்புப் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் இப்பிரிவு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதன்கிழமை நகரை வலம் வந்தனா்.

சிறப்புப் பிரிவின் தொடக்க நிகழ்ச்சியில் காவல்துறை ராமநாதபுரம் சரக துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை மருத்துவா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT