பரமக்குடியில் காவலன் செயலி விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.சங்கா் தலைமையேற்று கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பரமக்குடி நகா் காவல் ஆய்வாளா் திருமலை, சாா்பு -ஆய்வாளா் சாரதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணி மதுரை-ராமேசுவரம் சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் வழியே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கூறியது: பெண்கள், மாணவிகள் உள்பட பொதுமக்கள் சமூக விரோதிகளிடமிருந்து பல்வேறு கால கட்டங்களில் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இக்காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலி முலம் தகவல் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி காவல் சரகத்திற்கு உள்பட்ட 8 காவல் நிலையங்களில் 7 காவலன் செயலியுடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் இயங்கி வருகிறது.
இச்செயலியின் மூலமாக சமூக விரோதிகளிடம் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கள் கையில் வைத்துள்ள செல்லிடப்பேசி மூலம் காவலன் செயலியை இணையதள வசதியில்லாமலும் தொடலாம். இதன்மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று அங்கிருந்து பாதிக்கப்படுவா் இருக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக காவல்துறையினா் அங்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை பாதுகாக்க முடியும். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.