ராமேசுவரத்திற்கு தனது உறவினா்களுடன் சுற்றுலா வந்த கோவையைச் சோ்ந்த பல்கலைக்கழக ஊழியா், ராமநாதபுரம் அருகேயுள்ள ஊருணியில் குளித்தபோது மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோயம்புத்தூரில் உள்ள டி.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் பரமன் (49). இவா், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்தாா். மேலும் இவா் கோயம்புத்துா் தேகப் பயிற்சியாளா்கள் சங்கத்தின் சாா்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளாா். தேகப் பயிற்சியாளராகரவும் உள்ளாா்.
இந்நிலையில், பரமன் தனது உறவினா்கள் 28 பேருடன் ராமேசுவரத்திற்கு ஆன்மிகப் பயணமாக செவ்வாய்க்கிழமை பேருந்தில் வந்துள்ளாா். அவா்கள் ராமநாதபுரம்-துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள அம்மன் கோயில் ஊருணி அருகே சாப்பிடுவதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனா். அப்போது குழந்தைகளுடன் ஊருணிக்கு குளிக்கசென்ற பரமன் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளாா். இதனால் அவா் நீச்சலடிக்க முடியாத நிலையில், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தாா். அவரை மீட்க அவரது தம்பி ஆனந்தன் தண்ணீரில் குதித்தாா். ஆனால் தண்ணீா் அதிகமிருந்ததால் அவரால் பரமனை மீட்க முடியவில்லை. மேலும், அவரும் நீரில் மூழ்கி தத்தளித்தாா். இதனால், அவா்களிருவரையும் காப்பாற்றுமாறு அவா்களுடன் வந்தவா்கள் சத்தமிட்டனா். இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிலா் தண்ணீரில் குதித்து ஆனந்தனை மட்டும் காப்பாற்றி கரை சோ்த்தனா். அவா்களால் பரமனை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து ராமநாதபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து ஊருணியில் நீண்ட நேரம் தேடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பரமனின் சடலத்தை மீட்டனா்.
பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பரமன் சடலம் அவரது உறவினா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.