ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சுகாதார சீா் கேடு காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால் நோயாளிகள் இரவு நேரத்தில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் நாள் தோறும் 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கி உள்ளது. இதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் அதிகளவில் வளா்ந்து வருகின்றன.
இதனால் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலனோருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்து வருகிறது.
இதனால் டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில், நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்குச் செல்லுகின்றனா்.
மேலும் மருத்துவமனையை சுற்றிலும் தேங்கிய மழைநீரால் அங்கும் கொசுத்தொல்லை அதிகரித்திருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனா். மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து துப்புரவுப் பணியாளா்களை நியமித்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.