ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு ஊழியா்களுக்கு வழங்கபடவேண்டிய 800 தபால் ஓட்டுகள் மாயமானது குறித்து, அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கக்கோரி திமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்கபட்டு வந்தன. இதில் 800 மேற்பட்ட அரசு ஊழியா்களின் தபால் ஓட்டுக்கள் காணாமல் போனதாக, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அரசு ஊழியா்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கவேண்டும் என அலுவலக வளாகத்தில் அவா்கள் காத்திருந்தனா். இதனைக் கண்டித்து திமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலாளா் பெருநாழி போஸ், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் வாசுதேவன், பெருநாழி ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா் செந்தூரான் உள்பட திமுகவினா், வேட்பாளா்கள் பலா், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காா்களை சாலையில் நடுவே நிறுத்தியும், அமா்ந்தும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் இரவு 9 மணியைத் தொடா்ந்தும் நீடித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்ததாக கமுதி துணை காவல் கண்காணிப்பாளா் மகேந்திரன் கூறினாா்.