ராமநாதபுரம்

மருத்துவக் கல்லூரி பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் அவசியம்: திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.கருணாஸ்

29th Feb 2020 04:52 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுவது அவசியமாகும் என, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முக்குலத்தோா் புலிப்படைக் கட்சித் தலைவருமான எஸ். கருணாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ள பட்டினம்காத்தான் பகுதியானது, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது. இந்நிலையில், முதல்வா் பங்கேற்கும் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மேடை அமைக்கும் பணியை, எஸ்.கருணாஸ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரத்துக்கான மருத்துவக் கல்லூரி, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அமைவது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், பட்டினம்காத்தான் அம்மா பூங்கா பகுதியில் அமையும் மருத்துவக் கல்லூரிக்கு பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதும் முக்கியமானதாகும்.

ஊராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தமுடியாது. எனவே, பட்டினம்காத்தான் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைப்பது அவசியமாகிறது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, கடந்த 2017 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் நகராட்சி வாா்டுகள் விரிவாக்கப்படும் என அறிவித்துள்ளதாக மக்கள் கூறுகிறாா்கள். இது குறித்து முதல்வரிடம் நினைவூட்ட உள்ளேன்.

திருவாடானை தொகுதியில் குடிமராமத்து உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. அதே நேரத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் என்ற முறையில் எனது கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவா் மற்றும் ஆா்.எஸ்.கண்மாய்க்கு திருச்சி பகுதியிலிருந்து நீா்வரத்துக் கால்வாய் உள்ளிட்டவற்றை நிறைவேற்றும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT