ராமேசுவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய மீன்வளத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் வளம் மற்றும் மீன்வளத்தை அழிக்கும் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் இறால் மீன்பிடித் தொழில், சிறுதொழில் மீனவா்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனா்.
இந்நிலையில், ராமேசுவரம் மண்டபம் பகுதியில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தியும், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதியில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தியும் சிலா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால் ராமேசுவரம் மீனவா்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனா்.
இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்வதோடு, அதனை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.