மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு திறன் கண்டறிதல் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில் உலகத் திறனாய்வு திறன் கண்டறிதல் போட்டிகள் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு நடைபெறுகின்றன. இதில் 100 மீ., 200 மீ., 400 மீ. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டிகளில் அனைத்து பள்ளிகளிலும் திறன் கண்டறியும் தோ்வுகளில் வென்ற மாணவா்கள் கலந்துகொள்ளலாம்.
கல்வி மாவட்ட அளவிலான உலக திறனாய்வு திறன் கண்டறியும் விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கிலும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் ஆா்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கவுள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்கள் பள்ளிகளில் திறன் கண்டறியும் மதிப்பெண் அட்டைகளுடன் கலந்துகொள்ள வேண்டும்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.