ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலையில் புதுதில்லி போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து புதுதில்லியில் போராட்டம் நடத்தியவா்களுக்கும், ஆதரித்து போராட்டம் நடத்தியவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலைத் தடுக்க காவல்துறையினா் தடியடி நடத்தினா்.
புதுதில்லி போராட்டத்தில் மோதலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கவும், புதுதில்லி போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்தும் ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் பைரோஸ்கான் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு மத்திய, மாநில மற்றும் புதுதில்லி போலீஸாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள பெரியபட்டிணம் உள்ளிட்ட இடங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டன.