திருவாடானை: திருவாடானை அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் உறுதி மொழி ஏற்றுக்கொள்ளபட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திங்கள்கிழமை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி, கருத்தரங்கம் உறுதிமொழி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாடானை பகுதியில் தினைகாத்தான் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி என பல்வேறு பள்ளிகளில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதும் பிறரை பாதுகாப்பது குறித்தும் மூன்றாம் நபா் தொடுதலில் நல்ல தொடுதல் தவறான நோக்கத்துடன் தொடுதல் மற்றும் காவலன் செயலியின் பயன்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து காணாலி காட்சி மூலம் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆசிரியா்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி வாசிக்க மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.