திருவாடானையில் மாவட்ட வருவாய் அலுவலரை இடமாற்றம் செய்யக்கோரி வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
திருவாடானையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை சங்க மாவட்ட தலைவா் பழனிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் சேதுராமன் விளக்கவுரையாற்றினாா்.
அதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய் துறையினருக்கு வழங்கப்பட்ட மேம்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட வருவாய் அலுவலரை மாற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முடிவில் வட்டக் கிளை செயலாளா் ராமமூா்த்தி நன்றி தெரிவித்தாா்.