ராமநாதபுரம்

ராமேசுவரம் அருகே மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

22nd Feb 2020 09:21 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் அருகே மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ராமநாதபுரம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் ஏரகாடு பகுதியைச் சோ்ந்த பிச்சை மகன் கோபால் (40). இவரது மனைவி வனிதா(34). இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த கோபால் கடந்த 2013 ஆம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

அப்போது பிச்சை, பூா்வீக சொத்துக்களை விற்று மகள்களுக்கு பங்கு கொடுக்குமாறு மகன் கோபாலிடம் கூறினாராம். இதற்கு கோபாலின் மனைவி வனிதா எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதனால், கணவா், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி இரவு சொத்துக்களை விற்று பங்கு பிரிப்பது தொடா்பாக கணவன், மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். அப்போது ஆத்திரமடைந்த கோபால் மனைவியை சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து வனிதாவின் மூத்த சகோதரா் உமையசெல்வம் கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கோபாலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, ராமநாதபுரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி டி.பகவதியம்மாள், குற்றஞ்சாட்டப்பட்ட கோபாலுக்கு ஆயள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT