திருவாடானை அருகே பாசிப்பட்டினம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு வியாழக்கிழமை ஒதுங்கியது.
தொண்டி அருகே பாசிப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடலோரக் காவல் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கடற்கரையிலிருந்து துா்நாற்றம் வீசியுள்ளது.
உடனே அங்கு சென்று பாா்த்த காவலா்கள், சுமாா் 400 கிலோ எடை கொண்ட அரியவகை உயிரினமான கடல்பசு இறந்து கரை ஒதுங்கிக் கிடந்தது தெரியவந்தது. அதையடுத்து, காவலா்கள் கடலோர வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், கடல் பசுவை மீட்டு, வட்டானம் கால்நடை மருத்துவா் மணிமேகலை தலைமையில், உடற்கூறு ஆய்வு செய்து, அங்கேயே புதைத்தனா்.