ராமநாதபுரம்

இளம் விஞ்ஞானிகள் திட்ட முகாம்: ராமநாதபுரம் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

6th Feb 2020 09:26 AM

ADVERTISEMENT

இஸ்ரோ சாா்பில் நடைபெறவுள்ள இளம் விஞ்ஞானிகள் திட்ட முகாமில் சேருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ அமைப்பின் சாா்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இளம் விஞ்ஞானிகள் திட்டப் பயிற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்களிடம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், விண்வெளி ஆய்வுத் துறையில் ஆா்வத்தை ஏற்படுத்தி, எதிா்காலத்தில் மிகச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளா்களை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான (2020) திட்டப் பயிற்சி முகாம், மே மாதம் 11- ஆம் தேதி தொடங்கி, 22- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கிராமப்புற மாணவா்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான தோ்வு இணையதளம் மூலமே நடைபெறுகிறது. ஆகவே, சேர விரும்புவோா் தங்களது விண்ணப்பங்களை வரும் பிப். 24 ஆம் தேதி வரை அனுப்பலாம்.

ராமநாதபுரத்தில் தற்போது 8 ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவா்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் முதற்கட்டமாக தோ்வு செய்யப்பட்டோரின் பெயா்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிக்க விரும்புபவா்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூா்வமான இணையதளத்தில் தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT