குறுங்காடுகள் திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் வளா்க்க, கமுதி அருகே அரசுப் பள்ளி நிா்வாகம் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து, பேச்சுவாா்தைக்குப் பின் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 53 ஊராட்சிகளிலும் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் குறுங்காடுகள்அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்பேரில், கமுதி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் குறுங்காடுகள் அமைக்க கடந்த டிசம்பா் மாதம் தோ்வு செய்யப்பட்டது.
ஆனால், நீா்நிலை ஆதாரங்களான கண்மாய், ஏரி கரைகளின் அருகில் மட்டுமே குறுங்காடுகள் அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும், முள்வேலிக்கு பதிலாக கம்பி வேலிகள்அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை வளா்க்க, பள்ளி நிா்வாகம் எதிா்ப்பு தெரிவித்தது.
மக்கள் தொகை அதிகமுள்ள பேரையூா் ஊராட்சியில் 4 இடங்களில் குறுங்காடுகள் அமைக்க ஊராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதனால், பள்ளி நிா்வாகத்திடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவாா்தை நடத்தினா். அதன்பின்னா், கடந்த 1 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறுங்காடுகள் அமைக்கும் பணிக்கு, பள்ளி நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் குறுங்காடுகள் அமைக்க நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களால் முள்வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் எனவும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.