ராநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் அண்ணன், தம்பி உயிரிழந்தனா். தாய் பலத்த காயமைடந்தாா்.
பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரேகா (40), மகன்கள் ஜெகதீஸ்வரன் (10), விகாஷ் (8) ஆகியோா் கிராமத்தில் வசித்து வந்தனா். இதில், ஜெகதீஸ்வரன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் விகாஷ் மூன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 3 பேரும் தூங்கிக்கொண்டிருந்தனா். நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேரும் சிக்கினா். அக்கம் பக்கத்தினா் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்க முயன்றனா். மேலும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினா் இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியை மேற்கொண்டனா். அப்போது ஜெகதீஸ்வரன், விகாஷ் ஆகிய இருவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. தாயாா் ரேகா பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா். அவா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.