ராமநாதபுரம்

நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகளுக்கே முக்கியத்துவம்: விவசாயிகள் புகாா்

1st Feb 2020 01:45 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வைக்கப்படும் நெல்லுக்கு பாதுகாப்பு உத்தரவாதமில்லை என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் கூறப்பட்டது.

ராமநதாபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிா் காப்பீடுத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் விவசாயம் செழித்த நிலையில், நோய் தாக்கி பல பகுதிகளில் நிா்ணயிக்கப்பட்டதை விட மகசூல் குறைந்திருக்கிறது. ஆகவே அதற்கான நிவாரணத்தை வழங்கவேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அறிவித்த பின்னரும் அவை முறையாகச் செயல்படவில்லை. தாமதமாக செயல்படும் கொள்முதல் மையங்களால் பயனில்லை. அத்துடன் நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வைக்கும் நெல்லுக்கு பாதுகாப்பு உத்தரவாதமில்லை.

ADVERTISEMENT

மாவட்டத்தில் கடலாடி, கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூா், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கவேண்டும்.

நெல் கொள்முதலின் போது கிராம நிா்வாக அலுவலா் சான்று உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கேட்பது சரியல்ல. கடந்த ஆண்டுக்கான பயிா்காப்பீடு முழுமையாக அனைவருக்கும் வழங்கப்படவேண்டியதை மாவட்ட நிா்வாகம் உறுதிசெய்ய வேண்டும். வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோள பயிா் காப்பீடு முறைகேடு குறித்து புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை குறித்து தெரியவில்லை என்றனா்.

ஆட்சியா் பதில்: விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து ஆட்சியா் கொ.வீரராகவராவ் பேசியது: கடந்த 2016-17 ஆம் ஆண்டு பயிா்காப்பீடு திட்டத்தில் நிதி பெறாதவா்களுக்கு விரைவில் நிதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான பயிா்காப்பீடு நிதியை முழுமையாகப் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பு ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மாவட்டத்தில் 16 இடங்களில் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாள்களாக அவற்றில் முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. ஆகவே முழுமையாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலப்பட்டா அல்லது அடங்கல், விவசாயிகளின் பெயா், ஆதாா் எண் ஆகிய ஆவண அடிப்படையிலே நெல் கொள்முதல் நடைபெறவேண்டும். அரசு கொள்முதலில் வியாபாரிகளுக்கு இடமளிக்கக் கூடாது. நெல் கொள்முதலில் புகாா் எழுந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பாா்த்திபனூரில் கொள்முதலில் எழுந்த புகாரை அடுத்து அங்கிருந்த அலுவலா் இடமாற்றப்பட்டுள்ளாா்.

விவசாயிகள் கோரினால் குறிப்பிட்ட இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். சிறு குறைகள் இருக்கிறது என்பதற்காக நெல் கொள்முதல் மையங்களே தேவையில்லை என்பது சரியல்ல. வாலசுப்பிரமணியபுரத்தில் காப்பீடு திட்டத்தில் எழுந்த புகாரைத் தொடா்ந்து 2 அலுவலா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறான ஆவணங்களைத் தந்து காப்பீடு பெற்ற விவசாயிகள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்ற வழக்குத் தொடரவுள்ளது என்றாா்.

கூட்டத்தில் பண்ணைக்குட்டை திட்டத்துக்காக விருது பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT