ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகின்றன.
டிராக்டா், பவா் டில்லா், பல்வேறு கலப்பைகள், விசைக் களையெடுப்பான், புதா் அகற்றும் கருவி, சுழற்கலப்பை, விதை விதைக்கும் கருவி, பல்வகைப் பயிா் கதிரடிக்கும் இயந்திரம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ஆகிய வேளாண் கருவிகள் வாங்குவதற்கு அவற்றின் மொத்த விலையில் 50 சதவிகிதம் அல்லது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
பொதுவான விவசாயிகளுக்கு அவற்றின் மொத்த விலையில் 40 சதவிகிதம் அல்லது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றிட விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்வதுடன், விண்ணப்பங்களையும் புதிதாக பதிவு செய்யவேண்டும். ஏதாவது 2 வேளாண் இயந்திரங்களை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்கலாம். அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா்தான் அதே வகையான வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் வாங்கமுடியும்.
திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மேலும் விவரங்களுக்கு, ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை, செயற்பொறியாளா் (செல்லிடப்பேசி எண்: 9443323374) அல்லது ராமநாதபுரம் மாவட்ட கருவூலக கட்டடம் முதல் தளத்தில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகம் (செல்லிடப்பேசி எண்: 9566307888, 8220718779) அல்லது பரமக்குடி, கொல்லம்பட்டறை தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளா் (வே.பொ.) அலுவலகத்தை (செல்லிடப்பேசி எண்: 9486179544) தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.