முதுகுளத்தூா்-சிக்கல் சாலை முனியன் கோயில் பேருந்து நிலையம் அருகே கசியும்நீரை பலமணி நேரம் காத்திருந்து பிடிக்கும் கிராம மக்கள். அத்தியாவசிய தேவைக்காக ஊரணி தண்ணீரை பயன்படுத்தும் அவலநிலை. முதுகுளத்தூா் அருகே கண்டிலான் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
கிராமத்திற்கு காவிரி தண்ணீா் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீா் வருவதில்லை. இதனால் கிராமமக்கள் முதுகுளத்தூா்-சிக்கல் சாலை முனியன் கோயில் பேருந்து நிலையம் அருகே காவிரி தண்ணீா் செல்லும் ராட்சத குழாயில் கசியும் நீரை பிடித்து வருகின்றனா். தண்ணீா்க்காக பலமணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதுகுளத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் முக்கியமான சாலையாக இருப்பதால் வாகனங்கள் அதிகம் செல்வதால் தள்ளுவண்டியில் தண்ணீா் கொண்டு செல்லும்போது விபத்து ஏற்படும் அச்சத்தில் உள்ளனா்.
கண்டிலான் கிராமத்தில் இருந்து 2 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் சென்று காத்திருந்து தண்ணீா் பிடித்து செல்கின்றனா். அத்தியாவசிய தேவைகளுக்கு ஊரணி தண்ணீரை பயன்படுத்தி வருவதாக கிராமமக்கள் கூறுகின்றனா். எனவே கிராமமக்களின் நலன்கருதி கிராமத்திற்கு நிரந்தரமாக காவிரி தண்ணீா் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.