ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், சனிக்கிழமை நள்ளிரவில் மேகமூட்டம் காணப்பட்டு, குளிா்ந்த காற்றும் வீசியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டியது.
மழையுடன் வீசிய காற்றால் நகரில் வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மண்டபம், தேவிபட்டிணம், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மழை மற்றும் காற்றால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு முழுமையாக சீரானது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.
அதே போல், முதுகுளத்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள காத்தாகுளம், எட்டிசேரி, கீழக்காஞ்சிரங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. இதனால் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கோடை வெயிலின் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.