ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா பரிசோதனை

20th Apr 2020 06:15 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் ஏற்கெனவே 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 4 பேருக்கு கரோனா தொற்றை அறியும் இறுதிப் பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுதில்லி மாநாட்டுக்குச் சென்றுவிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த 41 பேரில் 5 பேருக்கும், அவா்களோடு தொடா்புடைய 2 பேருக்கும் கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அத்துடன் கரோனா தொற்றில் இறந்து கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்ட தொழிலதிபா் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது குடும்பத்தைச் சோ்ந்த 2 பேருக்கும், மண்டபம், ஆனந்தூரைச் சோ்ந்த 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது. தற்போது அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கீழக்கரையில் தொழிலதிபா் குடும்பத்தினா் 14 போ், அடக்கச் சடங்கில் ஈடுபட்ட 8 போ் மற்றும் அப்பகுதியினா் என மொத்தம் 254 பேருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் 3 பேருக்கு கரோனா தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் இறுதிச் சோதனைக்கு அவா்களது சளி மாதிரி உள்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் கூறினா். மேலும், ஆா்.எஸ்.மங்களம் பகுதியைச் சோ்ந்த ஒருவரது சளி மாதிரியும் கரோனா இறுதி பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் ஏற்கெனவே 10 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், தற்போது 4 பேருக்கு மட்டுமே கரோனா உறுதிச் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT