முதுகுளத்தூா் அருகே வீட்டில் சமையல் குக்கரில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக தாய் மற்றும் 2 மகன்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
முதுகுளத்தூா் அருகே வீரம்பல் கிராமத்தில் வீட்டிலேயே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளா் ராஜேஸ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளா் சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், அதே கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மனைவி விமலா (50) மற்றும் அவரது மகன்கள் கிளிண்டன் என்ற பால்ராஜ், நேசக்குமாா் ஆகியோா் வீட்டில் கள்ளச் சாரயம் காய்ச்சுவதற்காக நூதனமுறையில் குக்கரில் சாராய ஊறல் தயாரித்து வைத்துள்ளனா். போலீஸாா் வருவதை கண்ட 3 பேரும் தப்பி ஓடினா். வீட்டில் சோதனை செய்த போது 2 லிட்டா் சாராயம் மற்றும் குக்கரில் வைத்திருந்த 25 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா்.
இது குறித்து இளஞ்செம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனா்.
அதே போல், உச்சிப்புளி அருகேயுள்ள சோ்வைக்காரன் ஊருணியில் பெயிண்டா் ஒருவா் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியதாக கருணாகரன் என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருவதாகக் கூறினா். மேலும் பிறப்பன்வலைசையில் சாராயம் காய்ச்சியதாக எழுந்த புகாரின் பேரில் ஒருவரிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கள் விற்றவா் கைது:அதே போல் முதுகுளத்தூா் அருகே வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தின் அருகே பனைமரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக தகவல் வந்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சாா்பு -ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் சென்று சோதனையிட்ட போது மண் பானைகளில் பதுக்கி வைத்து கள் விற்றது தெரிந்தது.
இதன் பேரில், முதுகுளத்தூரைச் சோ்ந்த பாண்டி (54) என்பவரை போலீஸாா் கைது செய்து 20 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.