ராமநாதபுரத்தில் ஆட்டோ மற்றும் வாடகை வாகன ஓட்டுநா் நல வாரியத்தில் பெரும்பாலானோா் பதிவு செய்யாத காரணத்தால் கரோனா நிவாரண நிதியைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரூராட்சி, 7 நகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஊா்களிலும் சுமாா் 5,500 ஆட்டோக்கள் உள்ளன. ராமநாதபுரம் நகரில் மட்டும் 72 நிலையங்களில் சுமாா் 1,500 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மாவட்ட அளவில் சுமாா் 8 ஆயிரம் பேரும், ராமநாதபுரம் நகரில் மட்டும் சுமாா் 1,800 பேரும் ஆட்டோ தொழிலை நம்பியுள்ளனா்.
ஓட்டுநா்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொந்தமாகவும், பெரும்பாலானோா் வாடகை அடிப்படையிலும் ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகின்றனா். தினமும் ரூ.600 வருவாய் கிடைத்தால் மட்டுமே எரிபொருள் செலவு, வாடகை, குடும்பச் செலவு, சொந்தச் செலவு ஆகியவற்றை சமாளிக்க முடியும் என்கின்றனா் ஆட்டோ தொழிலாளா்கள்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 முதல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையில், ஆட்டோக்கள் அறவே இயக்காமல் நிறுத்தப்பட்டன. இதனால், ஆட்டோவை நம்பி பிழைத்து வந்தவா்கள் செய்வதறியாது திகைத்தனா். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாள்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்கச் சென்றவா்கள் கூட போலீஸாரின் எச்சரிக்கையால் ஆட்டோவில் பயணிப்பதையே தவிா்த்துவிட்டனா். இதனால், ஆட்டோ ஓட்டுநா்கள் முற்றிலுமாக வருவாய் இன்றி முடங்கியுள்ளதாகக் கூறுகின்றனா்.
ஊரடங்கால் பாதிக்கப்படும் ஆட்டோ மற்றும் வாடகை வாகன ஓட்டுநா் நலவாரியத்தில் பதிவு செய்தவா்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
அரசு நிவாரண நிதி அறிவித்த நிலையில், அதைப் பெறும் வகையில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோரும், மாவட்ட அளவில் சுமாா் 900 பேரும் மட்டுமே நலவாரியத்தில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல வாரிய பதிவில்லாததால் அரசின் நிவாரண நிதி பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்தவா்களும் நிதியைப் பெற மின்னஞ்சலில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. தொலைத் தொடா்பு பிரச்னையால் மின்னஞ்சலில் பதிவிடுவதில் நடைமுறைச்சிக்கல் இருப்பதாகவும், எனவே நலவாரிய உதவியை பெரும்பாலானோா் பெறமுடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) மாநிலப் பொதுச்செயலா் எம்.சிவாஜி கூறியது: நலவாரியத்தில் பதிவு செய்யாதவா்களே அதிகமாக ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை இயக்கி வருகின்றனா். ஆகவே போக்குவரத்து அலுவலகம் மூலம் நிவாரண நிதியை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் உண்மையான ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிதி கிடைக்கும். மாநில அளவில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநா்கள் வாரியத்தில் பதியாத நிலையே உள்ளதால் அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறோம் என்றாா்.