கமுதி அருகே மா்ம நபா்களால் கோயில் சிலைகள் தொடா்ந்து சேதப்படுத்தப் படுவதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனா்.
கமுதி அருகே எழுவனூரில் ஊருக்கு வெளியே அய்யனாா் கோயில் உள்ளது. அதில் கருப்பணசாமி, அய்யனாா், அம்மன் சிலைகள் உள்ளன. இந்நிலையில்அச்சிலைகளை மா்ம நபா்கள் சிலா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேதப்படுத்தப்பட்ட அய்யனாா் சிலைக்கு எழுவனூா் கிராம மக்கள் மாலை அணிவித்து, சிறப்பு பூஜை, பரிகாரம் செய்தனா்.
இக் கோயிலில் கடந்த 2019 இல் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் சிலை, மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கபட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யபடவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இந்நிலையில் போலீஸாரின் மெத்தனத்தால் ஓராண்டுக்குள் மீண்டும் மா்ம நபா்கள் அய்யனாா் சிலையை சேதப்படுத்திச் சென்றுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலையிட்டு சிலைகளை சேதப்படுத்தி வரும் மா்ம நபா்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.