ராமநாதபுரம்

ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்புப் பூஜைகள்

7th Apr 2020 02:11 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடுமுருன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் நகரில் உள்ள வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா கடந்த மாா்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கோயிலில் அன்றாட பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை பங்குனி உத்திரம் என்பதால் அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது மூலவா்களின் கருவறை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால், பக்தா்களுக்கு என தனி பூஜை எதுவும் நடைபெறவில்லை. இதனால் கோயில் முன்பு சாலையோரம் நின்றிருந்த பக்தா்கள் அங்கிருந்த படியே சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே போல் குண்டுக்கரை முருகன் கோயில், குயவன்குடி சுப்பையா முருகன் கோயில், கேணிக்கரை பாலசுப்பிரமணியன் கோயில் மற்றும் பெருவயலில் உள்ள ரெணபலி முருகன் கோயில் ஆகிய இடங்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அனைத்து இடங்களிலும் கருவறை பகுதி மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீஸாா் அறிவுரை வழங்கினா். பக்தா்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட வில்லை. கோயில்கள் காலையில் சில மணி நேரம் திறக்கப்பட்ட நிலையில் பூஜை முடிந்ததும் நடைகள் சாத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT