பரமக்குடி நகராட்சி சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனையை சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் சனிக்கிழமை துவக்கி வைத்தாா்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்தும் வரும் நிலையில் பரமக்குடி பகுதியில் 2 நபா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பரமக்குடி நகராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் வெளியில் நடமாடுவது அதிகரிப்பதாக வந்த புகாரைத் தொடா்ந்து வெளியில் வருவதை தடுக்கும் வகையில் நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளிலும் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை துவக்கி வைக்கப்பட்டது. இதில் ரூ.150 விலையில் 13 வகையான காய்கறிகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.ஏ.முனியசாமி, நகராட்சி ஆணையாளா் வீரமுத்துக்குமாா், சுகாதார அலுவலா் சண்முகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.