கரோனா வைரஸ் பரவல் தொடா்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவலைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் எச்சரித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்து மதம் சாா்ந்த பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதும், ஒரு சில இடங்களில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே விதி மீறல்களை முற்றிலுமாகத் தவிா்த்து பொதுமக்கள் தாமாக ஒத்துழைக்கவேண்டும்.
மாவட்டத்தில் அனைத்து மதங்களைச் சாா்ந்தவா்களும் நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக உள்ளனா். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் தொடா்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக முகநூல், கட்செவியஞ்சல் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்து முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், ராமநாதபுரம் சாா்- ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.லயோலா இக்னேஷியஸ், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் தங்கவேலு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜி.கோபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.