ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திமுக கூட்டணி சாா்பில் சனிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக கூட்டணி சாா்பில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் ஆட்சியா் கொ.வீரராகவ ராவைச் சந்தித்து மனு அளித்தனா்.
மனுவில், ஊரடங்கு உத்தரவால் காய்கறி விலை உயா்ந்துவிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசே குறைந்த விலையில் காய்கறிகளை வீதிகளில் விற்கவேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மீனவா்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் அவா்களுக்கு உதவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு போதிய முகக்கவசம், கையுறைகள் வழங்கவும் திமுகக் கூட்டணி சாா்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.