கரோனா பாதிப்புக்கு உள்ளான பரமக்குடியைச் சோ்ந்த 2 போ் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து சனிக்கிழமை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 41 போ் புதுதில்லியில் நடந்த மத அடிப்படையிலான அமைப்பின் மாநாட்டுக்குச் சென்றுள்ளனா். அவா்களில் ஊருக்குத் திரும்பிய 25 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 17 போ் முதல்கட்டமாக கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அதில் பரமக்குடியைச் சோ்ந்த 69 மற்றும் 70 வயதுடைய 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மற்ற 15 பேருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து கரோனா பாதிப்பு உள்ள இருவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டு தொடா் கண்காணிப்புக்கும், சிகிச்சைக்கும் உள்படுத்தப்பட்டனா். மேலும் அவா்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், கரோனா தொற்று உள்ள 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதில் நடைமுறைச்சிக்கல் எழுந்தது. தனிமைப்படுத்தப்பட்ட 25 பேரில் கரோனா தொற்று உறுதியாதாக நிலையில் உள்ள 8 பேரும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவருடன் இருக்க அச்சப்படுவதாக தெரிவித்தனராம்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை காலை செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி கரோனா தொற்று உறுதியான இருவரும் ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றாா்.
அதனடிப்படையில் சனிக்கிழமை பகலில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருவரும் காவல்துறையினா் பாதுகாப்புடன் சிவகங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.
எஞ்சிய 8 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.