ராமநாதபுரம் அருகே உலக தூய்மை தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணியில் ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 23 பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணி விவேகானந்தர் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கி தேவிபட்டினம் நவபாஷாணம் நவக்கிரக கோயில் கடற்கரைப் பகுதியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, பேரணியில் பங்கேற்ற அனைவரும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் தமிழ்செல்வி, பாரத சாரண, சாரணியர் இயக்க செயலர்கள் செல்வராஜ் (ராமநாதபுரம்), மகாலெட்சுமி (மண்டபம்), காமாட்சி (மாநில பிரதிநிதி), பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.