ராமநாதபுரம் பகுதியில் சுற்றுலா வந்த வேளாண்மைக் கல்லூரி உதவிப் பேராசிரியையிடம் ரூ.1.14 மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடியது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூழகிரியில் உள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றுபவர் கீர்த்தனா (25). கல்லூரி சார்பில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். மாணவ, மாணவியருடன் உதவிப் பேராசிரியை கீர்த்தனாவும் வந்துள்ளார். ராமநாதபுரம் கடற்கரைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதி முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு உணவருந்தச் சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்தபோது, வாகனத்தில் வைத்திருந்த கீர்த்தனாவின் கைப்பையைக் காணவில்லையாம். அதில் விலை உயர்ந்த செல்லிடப்பேசிகள் 2, தங்க நகை, ரொக்கம் ரூ.1.10 லட்சம் ஆகியவை இருந்ததாம். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.14 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக கீர்த்தனா அளித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.