ராமாநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலர் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றவரை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கமுதி அடுத்துள்ள பெருமாள்தேவன்பட்டி பகுதியில் விருதுநகர் மாவட்டப் பகுதிகள் மற்றும் ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய காவலர் ராமநாதன், தனிப்பிரிவு போலீஸார் அருள், முருகன் (கமுதி) உள்ளிட்டோர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை போலீஸார் தங்களின் இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கியுள்ளனர். லாரி நிற்காமல் காவலர் ராமநாதனின் இரு சக்கர வாகனத்தில் மீது மோதியது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதில் காவலர் ராமநாதன் பலத்த காயமடைந்தார். அவர் சக போலீஸாரால் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில் டிப்பர் லாரி உரிமையாளர், ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், மண்டலமாணிக்கம் சார்பு -ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் திருநெல்வேலி சென்று, லாரி ஓட்டுநர் முத்துகுமார், உரிமையாளர் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் லாரி ஓட்டுநர் முத்துகுமார் மீது மண்டலமாணிக்கம் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.