ராமநாதபுரம்

வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு

10th Sep 2019 08:12 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம் வைகை ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நயினார்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட பாண்டியூர், அரசரடிவண்டல், சின்னஅக்கிரமேசி கால்வாய், ஆர்.எஸ்.மங்கலம் கால்வாய் முகப்பு, வல்லம், சிரகிக்கோட்டை உள்ளிட்ட வைகை ஆற்றுப் பகுதிகளில்  மணல் திருடப்பட்டு வருகிறது.
     இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.      அரசரடிவண்டல், பாண்டியூர், கங்கைகொண்டான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள், இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  
      ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் அதிகளவில் தேவைப்படுகிறது. இப்பகுதியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி இல்லாததால், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால், இடைத்தரகர்கள் மூலம் திருடி கொண்டுவரப்படும் வைகை ஆற்று மணல் கூடுதல் விலை கொடுத்து வாங்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.     எனவே, இயற்கை வளம் சுரண்டப்பட்டு, நிலத்தடி நீர் ஆதாரம்  பாதிக்கப்பட்டு வரும் சூழலில், மணல் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT