ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை: சக பெண் ஊழியர்கள் 3 பேர் காரணம் என கடிதம்

10th Sep 2019 10:20 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக  பெண் ஊழியர், திங்கள்கிழமை அதிகாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, தான் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சக பெண் ஊழியர்கள் 3 பேர் காரணம் என எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
        ராமநாதபுரம் காட்டூரணி பகுதியைச் சேர்ந்த நம்புராஜன் மனைவி சோபனா (41). இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். சோபனா அரசு போக்குவரத்துக் கழக ராமநாதபுரம் நகர் பணிமனையில் இளநிலை உதவியாளராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், அவர் வீட்டருகே உள்ள பொதுக் கிணற்றில் திங்கள்கிழமை அதிகாலை குதித்து தற்கொலை செய்துகொண்டார். 
      இதை தாமதமாக அறிந்த அவரது குடும்பத்தினர், கேணிக்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, போலீஸார் அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
       இது குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சோபனா கடிதம் எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அக்கடிதத்தில், அலுவலகத்தில் 3 சக பெண் ஊழியர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், இது சம்பந்தமாக அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால், தான் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 
      இத்துடன், அவரது ஏடிஎம் அட்டை, கொடுக்கல், வாங்கல் விவரங்களையும், தனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் எனவும் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
     இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தை அடுத்து, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 பெண் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என, கேணிக்கரை போலீஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT