ராமநாதபுரம்

67 விசைப் படகுகள் விதிமீறல்: ரூ.10.70 லட்சம் அபராதம்

7th Sep 2019 02:17 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் விதியை மீறி கடலோரத்தில் மீன்பிடித்ததாக கடந்த 9 மாதங்களில் 67 விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து ரூ.10.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் கூறினார். 
ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலோரப் பகுதியில் விதிமுறைகளை மீறி விசைப்படகுகள் மீன்பிடித்ததாக புகார்கள் எழுந்துள்ளன. 
இதுதொடர்பாக மாவட்ட மீன்வளர்ச்சித்துறை துணை இயக்குநர் இ.காத்தவராயன் வெள்ளிக்கிழமை கூறியது: 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,520 விசைப்படகுகள் உள்ளன. படகுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் (1983) விதிகளை படகுகள் பின்பற்றுகின்றனவா என்பதையும் திடீர் சோதனையின் மூலம் கண்காணித்து வருகிறோம். 
விசைப்படகுகள் 3 கடல் மைல் (தரையிலிருந்து 5.5 கி. மீ.) தூரத்துக்கு அப்பால் சென்றே மீன்பிடிக்க வேண்டும். நாட்டுப் படகுகளே 3 கடல் மைல்களுக்குள் மீன்பிடிக்கலாம். ஆனால், சில நாள்களுக்கு முன்பு அரியமான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகுகளின் எல்லைக்குள் விசைப்படகுகள் மீன்பிடித்தது கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 படகுகளுக்கு அபராதமாக ரூ.1.95 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் கடலோர எல்லை விதியை மீறி மீன்பிடித்ததாக 67 படகுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.10.75 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. கடல் அட்டை, பூ இரால், நீலக்கால் நண்டு போன்றவற்றை பிடிப்பதற்காகவே கடற்கரையோரமாக விதியை மீறி விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன. 
முதன்முறையாக விதி மீறும் விசைப்படகுகளுக்கு அவர்கள் பிடித்துள்ள மீன்களின் மதிப்பை விட ஐந்து மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக விதியை மீறினால் டீஸல் மானியம் உள்ளிட்ட அரசு சலுகைகளை ரத்து செய்வோம். மூன்றாவது முறையாக மீறினால் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும். இதை உணர்ந்து மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT