ராமநாதபுரம்

தூய்மை இந்தியா திட்ட கருத்துப் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாமிடம்

7th Sep 2019 02:15 AM

ADVERTISEMENT

தூய்மை இந்தியா திட்டம் குறித்த மக்கள் கருத்துப் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 2 ஆம் இடம் வகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பொதுமக்களிடம் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அறிந்துள்ளீர்களா, கிராமத் தூய்மை தன்மை எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கிராம அளவில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது, திரவக் கழிவு அகற்றும் திட்டம் கிராமங்களில் எந்த அளவு செயல்படுத்தப்படுகிறது ஆகிய 4 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு மக்கள் கருத்து பதிவிடப்பட்டு கணக்கிடப்படுகிறது.
கடந்த 1 ஆம் தேதி முதல் இதற்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு அதை தினமும் கணக்கிட்டும் வருகின்றனர். இப் பதிவில் தேசிய அளவில் 17 லட்சம் பேர் கருத்துப் பதிவிட்டு உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. 15 லட்சம் பேர் கருத்துப் பதிவிட்டு தமிழகம் 2 ஆம் இடம் வகிக்கிறது.
தமிழகத்தில் வியாழக்கிழமை வரை திருநெல்வேலியில் 1.80 லட்சம் பேரும், ராமநாதபுரத்தில் 1.58 லட்சம் பேரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் ராமநாதபுரம் 2 ஆம் இடம் வகிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 
கருத்துப் பதிவில் தீவிரம்: தூய்மை இந்தியா திட்ட கருத்துப் பதிவானது வரும் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறையில் ஒன்றிய அளவில் 11 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கருத்துப் பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
மாவட்டத்தில் ஊராட்சி வாரியாக மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து கருத்துப் பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கோரவள்ளி, காரான், கடலூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மோர்ப்பண்ணை உள்ளிட்ட கிராம மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வெள்ளிக்கிழமை காலையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட திட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில் தூய்மை இந்தியா செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கருத்துப் பதிவிடுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 
வெள்ளிக்கிழமை காலையில் மாவட்ட செயலாக்க அலுவலர் சு.குமரேசன் மற்றும் அலுவலர் அசோக்குமார் உள்ளிட்டோர் இது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்து நூற்றுக் கணக்கான பெண்கள் வந்து பயிற்சி பெற்றனர். விரைவில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT