ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை

4th Sep 2019 07:45 AM

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
       ராமநாதபுரம் நகரில் பசும்பொன் நகர், எம்எஸ்கே நகர், ஸ்ரீராம் நகர், ஐயர் மடம், மூலைக்கொத்தளம், வனசங்கரி அம்மன் கோயில் தெரு மற்றும் தாயுமான சுவாமி கோயில் தெரு, வெளிப்பட்டினம், இளமனூர் உள்ளிட்ட நகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 41 இடங்களிலும், தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 21 இடங்கள் என மொத்தம் 62 இடங்களில் விதவிதமான கண்கவரும் வண்ணங்களில் சிம்ம, ரிஷப வாகனங்களில் பல்வேறு தோற்றங்களில் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.      செவ்வாய்க்கிழமை மாலை, பரமக்குடி, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை (செப்.4) மாலையில், ராமநாதபுரம், தேவிபட்டினம், ராமேசுவரம், நரிப்பையூர், சாயல்குடி ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.
     ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், வழிவிடு முருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வண்டிக்காரத் தெரு, சாலைத் தெரு, அக்ரஹாரம் தெரு, பெரியார் நகர் வழியாகச் சென்று நொச்சியூரணியில் நிறைவடைகிறது. அங்கு, சிலைகளைக் கரைக்க பள்ளம் தோண்டப்பட்டு நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து சிலைகளும் கரைக்கப்படுகின்றன. 
      ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலங்களுக்கு 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  
திருவாடானை
     திருவாடானை நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. திருவாடானை  ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சன்னிதி முன்புள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் உள்ள கைலாச விநாயகர் மற்றும் திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள ஆதிரெத்தின கணபதி ஆலயங்களில் திங்கள்கிழமை மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
      இதேபோல், பாரதி நகரில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கமுதி
     விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கமுதி ஷத்திரிய நாடார் உறவின்முறை பள்ளி நிர்வாகக் குழு சார்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாடார் பஜார் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி, மாணவிகளின் நடன நிகழச்சிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
      பள்ளி வளாகத்திலிருந்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கமுதி செட்டி ஊருணி கரையில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தனர். பின்னர், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாணவிகளின் கும்மி நடன நிகழ்ச்சிக்குப் பின், சிலைகள் ஊருணியில் கரைக்கப்பட்டன. 
      இதேபோல், கமுதி அடுத்துள்ள அபிராமம் நவசக்தி விநாயகருக்கு 32 சிறப்பு அபிஷேகங்கள், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அபிராமம் நகர் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் வழியாக அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலை வெள்ளி தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.     ராமசாமிபட்டியில் கிராம பொதுமக்கள் சார்பில் 6 அடி உயரமுள்ள விநாயகர் சிலை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கமுதி சாலையில் உள்ள ஊருணியில் கரைக்கப்பட்டது.      நிகழ்ச்சியில் முளைப்பாரி, கரகாட்டம், வாணவேடிக்கை ஆகியனவும் நடைபெற்றன. கமுதி காவல் நிலைய ஆய்வாளர் கஜேந்திரன், சார்பு-ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT