ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகரில் குப்பைகள் பிரித்து சேகரிக்க 25 நவீன மின்கல வாகனங்கள்

4th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் சிறப்பு நிலைப் பேரூராட்சியில் வீடுகள் தோறும் குப்பைகளை மக்கும், மக்காதவை எனப் பிரித்து வாங்குவதற்காக, ரூ.40 லட்சம் மதிப்பில் 25 மின்கல இயக்கு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
       ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளிலும் தினமும் சுமார் 20 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் சேருகின்றன. அதில், சுமார் 15  டன் குப்பைகள் மக்கும் தன்மையுடையதாக உள்ளன. அவற்றை, அந்தந்தப் பகுதியில் உரமாக்கும் வகையில் 4 இடங்களில் நவீன உரக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
      குப்பைகளை தினமும் சேகரிக்க பெரிய லாரிகள் 2, இரும்பு குப்பைத் தொட்டிகளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் 3, இலகு ரக குப்பை லாரிகள் 4 ஆகியன ஏற்கெனவே உள்ளன. இந்நிலையில், 16 மின்கல (பேட்டரி) வாகனங்கள் சில வாரங்களுக்கு முன் வாங்கப்பட்டன. 
  அவற்றின் மூலம், துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வரும் நிலையில், தற்போது 25 மிக நவீன வசதியுடன் கூடிய மின்கல இயக்கு வாகனங்கள் (பேட்டரியால் இயங்குபவை) வாங்கப்பட்டுள்ளன.
     தூய்மை இந்தியா திட்டத்தில் வாங்கப்பட்டுள்ள இந்த வாகனங்களில் ஓட்டுநருக்கு மின்விசிறி, பண்பலை வானொலி ஆகிய வசதிகளும் உள்ளன. ஒரு முறை மின்சாரம் மூலம் சக்தி சேகரிக்கப்பட்டால், சுமார் 40 கிலோ மீட்டர் வரை இயக்கும் வசதியுள்ளது. 
  தெருத் தெருவாக குப்பைகளை வீடு வீடாகச் சென்று மக்குபவை, மக்காதவை என தரம் பிரித்து வாங்குவதற்காகவே, இந்த நவீன மின்கல இயக்கு வாகனம் வாங்கப்பட்டுள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 
    இந்த வாகனத்தை இயக்குவதற்கான பயிற்சி, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், பயிற்சி பெற்றவர்கள் மூலமே நகரில் ஓரிரு வாரங்களில் வாகனங்கள் இயக்கப்படவுள்ளதாகவும் நகர்நல அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
     நகராட்சியில் தற்போது மொத்தம் 41 மின்கல இயக்கு வாகனங்கள் உள்ளதாகவும், இவற்றின் மூலம் குப்பைகள் விரைவாக அகற்றப்பட்டு, நகர் சுத்தமாக பராமரிக்கப்பட உள்ளதாகவும், நகர்நல அலுவலர் தரப்பில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT