ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மழைநீர் சேமிப்பை அமைக்காத வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: இம்மாத இறுதிக்குள் ஏற்படுத்த கெடு

4th Sep 2019 07:48 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சிப் பகுதியில் மழை நீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்தாத வீடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மாத இறுதிக்குள் அமைக்கவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
       ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீர் சேமிப்பை ஏற்படுத்தும் வகையில், கண்மாய்கள், ஊருணிகளில் குடிமராமத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நகராட்சி நிர்வாகம்  சார்பிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
     தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாகவே ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
        நகராட்சியில் தற்போது 18,675 வீடுகள் உள்ளன. அதில், 5,215 வீடுகளில் மட்டுமே மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சியில் மட்டும் இன்னும் 13,460 வீடுகளில் மழை நீர் சேகரிப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.  நகரில் 2,500 சதுர அடியில் 36 வணிக ரீதியிலான கட்டடங்கள் உள்ளன. அவற்றில், 24 கட்டடங்களில் மட்டுமே மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதில், 12 கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு இல்லை. 
     இதேபோல், நகரில் அரசு சார்ந்த 144 அலுவலகக் கட்டடங்கள் உள்ளன. அதில், 56 கட்டடங்களில் மட்டுமே மழை நீர் சேகரிப்பு அமைப்பு இருக்கிறது. அதன்படி, 88 அரசு அலுவலகக் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு இல்லை. 
     மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து கண்காணிக்க 8 குழுக்களை நகராட்சி ஏற்படுத்தியுள்ளது. இதில், கொசு ஒழிப்பு பிரிவினர், தூய்மை இந்தியா திட்டத்தில் இருப்பவர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றுள்ளனர். 
      மழை நீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதாகக் கூறப்படும் கட்டடங்களிலும், அவை போதிய பராமரிப்பின்றி உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, அவற்றையும் நகராட்சி சார்பில் கணக்கெடுத்து மழை நீர் சேகரிப்பு அமைப்பை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
       மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தாத வீடுகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில், இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி, அதை நகராட்சியில் பதிவு செய்யவேண்டும். இல்லையெனில், குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
     இது குறித்து நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதனிடம் கேட்டபோது,  அவர் கூறியது: நகராட்சியில் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையிலேயே மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்த அறிவுறுத்துகிறோம். எனவே, மக்கள் மழை நீர் சேகரிப்பில் ஈடுபடுவது அவசியம். செப்டம்பர் மாதத்துக்குப் பிறகும் மழை நீர் சேகரிப்பை ஏற்படுத்தாதவர்கள்  மீது சட்டரீதியாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT