ராமநாதபுரம்

பரமக்குடி, ராமேசுவரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

4th Sep 2019 07:46 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
       பரமக்குடியில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் நகர் தலைவர் எஸ். வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநிலப் பேச்சாளர் கே.என். கெங்காதரன், மாவட்டப் பொருளாளர் கே. ஆதித்தன், நகர் துணைத் தலைவர்கள் டி.கே. தாமோதரன், என். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி பேச்சாளர் பி.ஜி. திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
      பரமக்குடி நகர், எமனேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் 46 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்து முன்னணி சார்பில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை கிருஷ்ணா தியேட்டர் பகுதி மற்றும் வழிவிடுமுருகன் கோயில் பகுதியில் அனைத்து சிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. 
      இந்த ஊர்வலத்தை, மாநிலப் பேச்சாளர் கே. ரெத்தினசபாபதி கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஊர்வலமானது, சந்தைக்கடைத் தெரு, சின்னக்கடைத் தெரு, கீழப்பள்ளிவாசல் தெரு, காந்தி சிலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளின் வழியே சென்று, பெருமாள் கோயில் படித்துறையை அடைந்தது. அங்கு, வைகை ஆற்றில் தோண்டப்பட்டிருந்த குளம் போன்ற பள்ளத்தில் அனைத்து  சிலைகளும் கரைக்கப்பட்டன.
     இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்களும், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ராமேசுவரம்
       ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், மண்டபம் முகாம் உச்சிப்புளி உள்ளிட்ட  இடங்களில் 71 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இருந்து 71 விநாயகர் சிலைகளும் டிராக்டர், மினி வேன்களில் ஏற்றி, மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அக்கினி தீர்த்தக் கரையில் கரைக்கப்பட்டன.
     இதேபோன்று, மற்ற இடங்களில் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT