ராமநாதபுரம்

பரமக்குடியில் ரூ.77 லட்சத்தில் நுண் உர செயலாக்க மையம் திறப்பு: பெண்கள் எதிர்ப்பு

4th Sep 2019 07:49 AM

ADVERTISEMENT

பரமக்குடி நகராட்சியில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ், ரூ. 77.77 லட்சம் மதிப்பீட்டில் நுண் உர செயலாக்க மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதற்கு, அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
       பரமக்குடி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள், இங்கு அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவற்றை உரமாக்கும் செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  இதற்காக, ரூ. 77.77 லட்சம் மதிப்பீட்டில் நுண் உரக் கிடங்குக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.   
     இதனை, சட்டப்பேரவை உறுப்பினர் என். சதர்ன்பிரபாகர் திறந்து வைத்தார். அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, மாநில மகளிரணி இணைச் செயலர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஏ. பாதுஷா, ஐ.வின்சென்ட், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே. அப்துல்மாலிக், பொதுக்குழு உறுப்பினர் எம். நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நகராட்சி ஆணையர் எஸ். நாகராஜன் வரவேற்றார்.
      நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
      ஆனால், குடியிருப்புகள், மாணவிகள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ள இப்பகுதியில் துர்நாற்றம் வீசக் கூடிய குப்பைக் கழிவுகளை கொட்டி உரம் தயாரிப்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், எனவே நுண் உர செயலாக்க மையம் திறக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுதிரண்டனர்.  
    இதற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் என். சதர்ன் பிரபாகர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர், பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றும் சமாதானம் செய்து, அவர்களை அனுப்பி வைத்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT