ராமநாதபுரம்

கந்து வட்டி கொடுமை: மூதாட்டியின் வீட்டை அபகரிப்பதை கண்டித்து மீனவ சங்கத்தினர் போராட்டம்

4th Sep 2019 07:47 AM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் வட்டிக்கு பணம் வாங்கி, வெளிநாட்டுக்கு மீன்பிடிக்கச் சென்ற மகன் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மகன் வாங்கிய  கடனுக்காக மூதாட்டியின் வீட்டை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏ.ஐ.யு.டி.சி. மீனவ சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
      தாலுகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி. மீனவ சங்க மாநிலப் பொதுச் செயலர் சி.ஆர். செந்தில்வேல் தலைமை வகித்தார்.  
      ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் மீனவர் காலனியை சேர்ந்த நம்புவேல் மனைவி முனியம்மாள் (69). நம்புவேல் இறந்துவிட்ட நிலையில், தனது மகன் நம்புமுருகனுடன் முனியம்மாள் வசித்து வந்தார். 
      இந்நிலையில், நம்புமுருகன் கடந்த 2015 ஆம் ஆண்டு துபை நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கச் சென்றார். இதற்காக, மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்களிடம் வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். 
      அதையடுத்து, நம்புமுருகன் அங்கிருந்து அனுப்பி வைத்த பணத்தின் மூலம்,  முனியம்மாள் தொடர்ந்து வட்டி கட்டி வந்துள்ளார். ஆனால், கடந்த 2.12.2017 ஆம் ஆண்டில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்புமுருகன், படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். அதையடுத்து, 2 மணி நேரத்துக்கு பின் அவரது சடலத்தை மீட்டனர். அவரது உடலை இங்கு கொண்டு வரமுடியாமல் போனதால், துபையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இறப்புச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழக அரசின் நிவாரணம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கிடைக்கும் நிவாரணமும் பெற முடியாத நிலை ஏற்பட்டது.       இந்நிலையில், வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் முனியம்மாளிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். மேலும், முனியம்மாளின் பெயரில் உள்ள வீட்டை அபகரிக்கும் நோக்குடன் கந்து வட்டி கும்பல் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.      இது குறித்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
      இதனைக் கண்டித்தும், மகனை இழந்து வாடும் முனியம்மாளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு மற்றும் கந்து வட்டி கும்பலிடமிருந்து பாதுகாப்பும் வழங்கிடக் கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர். 
     பின்னர், இறந்துபோன மீனவருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கி தமிழக அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும், முனியம்மாளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என, வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT