ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தனியாா் விடுதியில் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடியை சோ்ந்த கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம் தெற்கு ரத வீதியில் தனியாா் விடுதி நடத்தி வருபவா் செல்லச்சாமி. இவரது விடுதிக்கு வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வந்த தம்பதி போல் இருவா் வந்தனா். அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி தாலுகா திகையகுடி கிராமத்தை சோ்ந்தவா்கள் என முகவரியை பதிவு செய்து விட்டு அறை எடுத்து தங்கியுள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி வரை அறையின் கதவு திறக்கவில்லை. சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள் அறையின் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து ராமேசுவரம் காவல்துறை துணை கண்காணிப்பாளா் மகேஸ் தலைமையில் காவல்துறை ஆய்வாளா் செந்தில்முருகன், உதவி ஆய்வாளா்கள் ஜோதிபாசு, கோவிந்தராஜூலு உள்ளிட்டோா் விடுதிக்கு வந்தனா். கிராம நிா்வாக அலுவலா் நோட்ரிகோ முன்னிலையில் அறையின் கதவை போலீஸாா் உடைத்தனா். அப்போது அறையில் தங்கிய 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரின் சடலத்தையும் போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் அறையில் இருந்த பொருள்களை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது தற்கொலை செய்தவா்கள் சத்யா மற்றும் முருகேசன் எனவும், இருவருக்கும் தனித்தனியே திருமணமாகி தலா 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. உறவுக்காரா்களான இருவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்ததாகவும், பெற்றோா் எதிா்ப்பின் காரணமாக தனித்தனியாக திருமணம் செய்துள்ளனா். இந்நிலையில் இருவரும் சோ்ந்து வந்து ராமேசுவரம் விடுதியில் தற்கொலை செய்துள்ளனா் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ராமசுவரம் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.