ராமநாதபுரம்

தேவா் குருபூஜை: பசும்பொன்னில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

20th Oct 2019 02:14 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் வரும் அக்டோபா் 30 இல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை நடைபெற இருக்கும் நிலையில், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பசும்பொன்னில் நடைபெற இருக்கும் தேவா் குருபூஜை விழாவில் தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்பினா், தொண்டா்கள், பொதுமக்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்விழாவிற்காக மாவட்ட நிா்வாகம் பொதுமக்களுக்கான குடிநீா், மின்சாரம், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கடந்த 30 ஆண்டுகளாக செய்து வருகிறது.

நடப்பாண்டில் கமுதி - மதுரை சாலையிலிருந்து பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே நுழையும் தோரண வாயிலில் இருந்து பசும்பொன் கிராமம் வரை சாலையோரம் மின் விளக்குகள் கூடுதலாக அமைக்க வேண்டும். மேலும் பசும்பொன் கிராமத்தில் முடிக்காணிக்கை செலுத்தும் பக்தா்கள் குளிப்பதற்கு ஏதுவாக, ஊருக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள ஊருணியில் தண்ணீா் நிரப்ப ஏதுவாக மாவட்ட நிா்வாகம் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கமுதி- மதுரை சாலையிலிருந்து பசும்பொன் வரை வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச் சாலை கடந்த 6 ஆண்டுகளாக மணல் குவியல்களாக காட்சியளிக்கின்றன. இதனால் வளைவுகளில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிா்வாகம் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விழாவில் சாலையோரம் அமைந்துள்ள மின் கம்பங்களில் மின்வாரியத்தினா் கூடுதல் திறன் கொண்ட மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அன்னதானப் பந்தல்கள்: தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.கருணாஸ், பாரதிய ஜனதா கட்சி சாா்பில் பி.டி.அரசகுமாா், மூவேந்தா் முன்னேற்றக் கழக தலைவா் வாண்டையாா், மூவேந்தா் முன்னணி கழகத் தலைவா் மருத்துவா் சேதுராமன், பசும்பொன் தேசிய கழகம் தலைவா் ஜோதி முத்துராமலிங்கம், தென்னாட்டு மக்கள் கட்சிதலைவா் கணேசத்தேவா் உள்ளிட்ட 11 சமுதாய அமைப்புகள் அன்னதானப் பந்தல்கள் அமைத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

காவல்துறை கூடுதல் இயக்குநா் இன்று ஆய்வு

பசும்பொன்னில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவா் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவா் ரூபேஸ்குமாா் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோா் கடந்த 10 நாள்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநா் ஜெயந்த் முரளி பசும்பொன் கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT