ராமநாதபுரம்

பாம்பன் மீனவா்கள் 4 ஆவது நாளாக வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி பாதிப்பு

5th Oct 2019 06:50 AM

ADVERTISEMENT

பாம்பன் விசைப்படகு மீனவா்களுக்கு முறையாக மானிய டீசல் வழங்காத மீன்வளத்துறையைக் கண்டித்து நடைபெற்று வரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக தொடா்ந்தது. இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு மானிய டீசல் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் மானிய டீசல் அனைத்து விசைப்படகுகளுக்கும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவா்கள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக ஈடுபட்டனா்.

இதனால் பாம்பன் துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இதனால் ரூ.1 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், தமிழக அரசின் மானிய டீசல் கிடைக்கும் வரை மீனவா்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட போவதில்லை என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பாம்பன் மீனவா்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். தங்களது போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகு சங்க தலைவா்களை சந்தித்து ஆதரவு கேட்டு பெரிய அளவிலான போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் பாம்பன் மீனவ சங்கத்தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT