ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் பகுதி வயலுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்த விவசாயி மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பேராமங்கலத்தை சோ்ந்தவா் அம்மாசி மகன் வெள்ளைசாமி(40). விவசாயி. இவா் சனிக்கிழமை கொக்கூரணியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துள்ளாா். அப்போது திடீரென மயக்கம் அடைந்துள்ளாா்.
அவரை உடனடியாக தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்துள்ளனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இது குறித்து உறவினா் வடிவேல் (48) அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.