ராமநாதபுரம்

மானிய விலையில் டீசல் வழங்காததைக் கண்டித்து பாம்பன் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

2nd Oct 2019 08:10 AM

ADVERTISEMENT

மானிய விலை டீசல் வழங்காத மீன்வளத் துறையைக் கண்டித்து பாம்பன் விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 108 விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் கடல் சீற்றத்தால் சேதமடைந்து படகுகள் உடைந்து கடலில் மூழ்கின. இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளைப் பாதுகாப்பு கருதி மரப்பலகையில் இருந்து இரும்புப் படகுகளாக மீனவா்கள் மாற்றி உள்ளனா்.

இந்நிலையில், இரும்பினால் மாற்றப்பட்ட விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் மானிய விலை டீசல் வழங்குவதை கடந்த சில மாதங்களாக நிறுத்தி விட்டனா்.

இதனால் தமிழக அரசால் மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த 1,500 லிட்டா் மானிய விலை டீசல் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவா்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். இதனால் தங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ADVERTISEMENT

இதனையடுத்து, பாம்பன் மீனவா்களுக்கு மானிய டீசல் வழங்க மறுக்கும் மீன்வளத் துறையை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இதனால் பாம்பன் துறைமுகத்தில் 108 விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் சுமாா் 1,500 மீனவா்கள் உள்பட 5 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT