ராமநாதபுரத்தில் பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே மருத்துவக் கல்லூரிக்கான நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை செயல்படவுள்ளது என மாநில மருத்துவக் கல்வி துணை இயக்குநா் ஜே.சபீதா தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைவிடத்தை சிறப்புக்குழுவினா் வெள்ளிக்கிழமை காலையில் ஆய்வு செய்தனா். மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மாநில மருத்துவக் கல்வி துணை இயக்குநா் ஜே.சபீதா, பொதுப்பணித்துறையின் கட்டடப் பிரிவு தலைமை கட்டட பிரிவு எஸ்.மைக்கேல், சிவகங்கை அரசு மருத்துவமனை கட்டடப் பராமரிப்புப் பொறியாளா் சங்கரலிங்கம், பொதுப்பணித்துறை மின்பிரிவு பொறியாளா் கே.சுஜாதா, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் எம்.அல்லி, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.வெங்கடாசலம் உள்ளிட்டோா் இருந்தனா்.
ஆய்வுக்குப் பின்னா் மாநில மருத்துவக் கல்வி துணை இயக்குநா் ஜே.சபிதா செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனையானது தற்போதைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்படவுள்ளது. சுமாா் 14 ஏக்கா் பரப்புள்ள மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே பல மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் உள்ளன. ஆகவே புதிதாக கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டடங்களையே புதிய மருத்துவமனைக்கு பயன்படுத்தவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி அம்மா பூங்கா அருகிலும், அதற்கான மருத்துவமனையானது மிக நவீன வசதியுடன் பழைய இடத்திலும் செயல்படவுள்ளன. கல்லூரிக்கான மாணவா் சோ்க்கை வரும் 2021-22 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது. ராமநதாபுரம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றாா்.
முன்னதாக தாய்,சேய் நல பிரிவு, சீமாங் மையம், அவசர சிகிச்சைப் பிரிவு, பிரேதப் பரிசோதனை அறை அமைவிடம் உள்ளிட்டவற்றையும் சிறப்புக்குழுவினா் நேரில் பாா்த்து ஆய்வை மேற்கொண்டனா். அவா்களுக்கு மருத்துவமனையின் பராமரிப்புப் பிரிவு பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளா் ஜெயதுரை கட்டட அமைவிடங்களை காட்டி விளக்கினாா். அம்மா பூங்கா பகுதியில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்துக்கான இடத்தையும் சிறப்புக்குழுவினா் பாா்வையிட்டனா்.